நம்பரை எழுதி வச்சிட்டு போனால், வழி மறைத்த காருக்கு சொந்தக்காரர் ஃபோன் பண்ணுவாங்க. அப்புறம் அவள் போய் காரை எடுத்து அவுங்க இடத்திலேயே பார்க் பண்ணிவிடுவாள். இது பாதி பேருக்கு சர்வ சாதாரணம். ஆனால் சிலருக்கு கோபத்தை உண்டாக்கும் விஷயம். அதே கோபம் தான் அன்றைக்கு டேவிட்டுக்கும் வந்தது. அந்த வெள்ளை கார் அவனுடையது தான். ஃபோன் நம்பரை பார்த்து அழைத்தான். காரினுள் சின்ன பிள்ளையார் சிலை கண்டு அது ஒரு இந்தியரின் காராகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தான்.
"ஹலோ!"
பெண் குரல் கேட்டதும், இன்னும் கோபம் வந்தது அவனுக்கு. ஆமாம் பெண்கள் கார் ஓட்டினாலே ஏளனமாகவும் ஒரு குறிகிய எண்ணத்தோடுதானே பார்க்கும் இந்த ஆண் வர்க்கம். சரமாரியாக திட்டித் தீர்த்துவிடலாம் என நினைத்தான்.
"ஹலோ.... என்னோட காரை பூளோக் பன்னி உங்க காரை பார்க் பன்னியிருக்கிங்க...!" என கத்தினான் டேவிட்.
"ஸோரி ஸிர், ஒன் த வேய்..."
"என்ன ஸோரி...?? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா...?"
காதில் புகை கிளம்பியது சாவித்யாவுக்கு. ஸோரி சொல்லியும் திட்டினால் கோபம் வராதா என்ன...?
"என் கிட்ட நிறைய இருக்கு.....!! உங்களுக்கு எத்தனை கிலோ வேணும்.....?" என்றாள் திமிராக. மறுமுனையில் ஒரு சத்தமும் இல்லை. சாவி அவள் ஃபோனை பார்த்தாள். அது அழைப்பு முடிந்து இயல்பான நிலையில் இருந்தது. "வச்சிட்டான் போல. அந்த பயம் இருக்கட்டும்...!" என பெருமிதம் கொண்டாள்.
பேட்டரி இல்லாத தன் ஃபோனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் டேவிட்.
"கொஞ்சம் கூட மரியாதை தெரியாத மடையனா இருப்பான் போல. இப்படி காட்டு கூச்சல் போடுறான். ச்செ..!! இருக்கட்டும் போய் அவனை ஒரு கை பார்த்துடுறேன்.." என்றபடி நடந்தாள் சாவி.
கடைத்தெரு வீதியின் ஓரமாக நின்று கொண்டு, யாருடைய காராக இருக்கும் என அந்த காரின் அருகே வரும் பெண்களையெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தான் டேவிட். தூரத்தில் ஒரு பெண் தனக்கு வாங்கிய உணவை அங்கிருந்த ஒரு பிச்சைக்கார கிழவனுக்குக் கொடுப்பதை கண்டான். அந்த சம்பவம் அவனை ஈர்த்தது. அந்த கிழவன் எதோ கேட்க அவள் சைகையின் மூலம் அவள் சாப்பிட்டுவிட்டதாகவும் தனக்கு வேண்டாம் என்பது போல் சொல்வதாக அவனுக்கு புரிந்தது. கிழவன் வாழ்த்துவது போல் கையசைத்துவிட்டு சந்தோஷமாக நடந்தான். டேவிட் மறுபடியும் அந்த பெண்ணையே கவனிக்கத் தொடங்கினான். அவள் பேரழகி அல்ல. சுமாரான அழகுதான். இருந்தாலும் அவன் கண்கள் அவளை விட்டு அகலவில்லை.
அவள் இரு கடைகளுக்கு பிறகு தள்ளி இருக்கும் ஒரு பேக்கரியில் நுழைந்தாள்.அவசரமாக ஏதோ ஒன்றை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தாள். ஓட்டமும் நடையுமாக வந்த அவள், அவன் நிற்கும் இடத்தையே நெருங்கினாள். ஒரு வேளை இவள் தான் அந்த காருக்கு சொந்தக்காரியாக இருக்குமோ என யோசித்தான். வந்தது சாவித்யாவேதான்.
வந்தவள் சுற்று முற்றித் யாரையோ தேடினாள். அவள் கண்களுக்கு யாரும் அகப்படவில்லை. டேவிட்டை நெருங்கினாள்.
"எக்ஸ்க்யுஸ் மி ஸிர்...! ஹவ் யு சீன் எனி இண்டியன் மேன் ஹியர்...? ஒவ்னெர் ஒஃப் திஸ் வைட் ஹொண்டா..?" என கேட்டாள். அவள் பேசும்போது அவள் கண்களும் பேசின. காந்த கண்கள் அவளுடையது. நேர்த்தியான மூக்கு.... சின்ன உதடுகள்... முன்பற்கள் சிறிது பெரியாதாக இருந்தாலும், அது வரிசையாகவும் அழகாகவும் இருந்தது அவளுக்கு. அந்த பற்களால் உதட்டை கடித்துக் கொண்டு அவனின் பதிலுக்காக நின்றாள்.
டேவிட் சற்று சுதாரிகரித்தாவாறு, ஆச்சரியத்துடன் "நோ" என்றான்.
"இட்ஸ் ஒகே, தேங்க்ஸ்" என்றவள், தனக்கு சற்றுமுன் வந்த ஃபோன் அழைப்பை பார்த்து, டேவிட்டின் நம்பருக்கு திரும்ப அழைத்தாள். அழைத்த நபர் ஸ்விட்ச் ஆஃப் செய்யதுவிட்டார் என பதில் வந்ததும், அழைப்பை துண்டித்தாள். டேவிட் அங்கேயே நிற்காமல், பேட்டரி இல்லாத அவனுடைய ஃபோனில் ஏதொ கால் செய்து யாருடனோ பேசுவது போல் பாவலா பன்னிக்கொண்டே தூரமாக நகர்ந்தான்.
காருக்குள் நுழைந்த சாவித்யா, ஏதோ எழுதினாள். பிறகு அந்த காகிதத்தை அவன் காரின் வைப்பரின் மீது வைத்துவிட்டுச் சென்றாள். டேவிட்டும் அதைக் கண்டும் காணாதது போல் வேறு பக்கமாக நடந்தான். அவளோ வைத்த வேகத்தில் காரில் பறந்தாள். அவள் கார் மறைந்த பிறகே டேவிட் அவனுடைய காருக்கு அருகில் சென்றான். அந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.தமிழில் எழுதியிருந்தது.
"திமிரு புடிச்ச குரங்கே...! அடுத்தவங்க கிட்ட பேசும்போது கொஞ்சம் மரியாதையா பேச கத்துக்கோ...! -இப்படிக்கு உன்னை வழி மறைத்த கார் ஓனர்... சாவி!"
பார்த்துவிட்டு சிரித்தான். தமிழில் சரளமாக பேச தெரியுமே தவிர டேவிட்டுக்கு தமிழில் எழுதவோ படிக்கவோ தெரியாது. இருந்தாலும் அந்த காகிதத்தை மடித்து தன் டாஷ்போர்டில் வைத்தான்.
"அவளிடம் ஏன் கோபத்தை நேரில் காட்ட முடியவில்லை.." என மனதுக்குள் யோசித்தாவாரே தன் காரில் மெதுவாக நகர்ந்தான்.
டேவிட் சித்தார்த், பார்ப்பதற்கு வெள்ளைக்காரனை போலவே இருப்பான். எழுமிச்சை பழ நிறம்.... நல்ல உயரம்... நடுத்தரமான உடல்வாகு... சாக்லட் நிற கண்கள்....... இவையனைத்தும் அவனை முதலில் பார்க்கும் யாரும் அவன் ஒரு வெளி நாட்டவர் தான் என உறுதியாக சொல்லகூடும். அப்படித்தான் சாவித்யாவும் நினைத்துக்கொண்டு அவனிடம் அவனைப் பற்றியே ஆங்கிலத்தில் விசாரித்திருக்கிறாள்.
நல்ல அடைமழையில் வீடு வந்து சேர்ந்தான், டேவிட். பெரும்பணகாரர்கள் குடியிருப்பு பகுதியில்தான் அவன் வீடு அமைந்திருந்தது. வீட்டினுள் நுழைந்தவுடன் அவனுடைய பாட்டி துண்டுடன் வந்து, டேவிட்டின் டையை பிடித்து இழுத்து, அவன் தலையை துவட்டினார். "விடுங்க பாட்டி, நான் என்ன சின்ன பையனா..?" என்றான் சிரித்தாவாரே. "சித்து கண்ணு, எனக்கு இன்னும் சின்ன புள்ள தான்...!" என்று கண்ணத்தில் கிள்ளினார் பாட்டி. "போய் முதல்ல குளிச்சிட்டு வாயா...பாட்டி உனக்கு டீ போட்டு வைக்கிறேன்.." என்றவாரே சமையல் அறைக்கு சென்றார் மரகதம் பாட்டி. கொழு பொம்மை போல் இருக்கும் அந்த மரகதம் பாட்டிக்கு தன் மகள் வயிற்று பேரன் மேல் கொள்ளை ப்ரியம்.
டேவிட்டின் அப்பா திரு. ஸ்மித், ஒரு வெள்ளைகாரர், மிக பெரிய தொழிலதிபர். லண்டன் பிரஜையான அவர், மலேசியாவிற்கு வருகை தந்தபோது, தொழில் ரீதியில் அறிமுகமான தனது நண்பர் ராமனின் தங்கையை காதலித்து மணந்துக்கொண்டார். திரு ஸ்மித் மற்றும் திருமதி லஷ்மிக்கும் பிறந்தவன் தான் டேவிட் சித்தார்த் ஸ்மித். டேவிட் என்ற பெயரே இவனுக்கு பிடிக்கும். தன் விருப்பப்படி எம்.பி.ஏ படித்தான். அம்மா அப்பாவின் ஆசைப்படி அவர்கள் குடும்ப பிஸினஸையே கவனித்துக்கொண்டான். அவனுக்கு உயிராக இருந்த இவ்விருவருமே 2 வருடங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டனர். ஒரே நாளில் உலகமே இருண்டு போனது போல இருந்தது டேவிட்டுக்கு. உருகுலைந்த இவன், சில மாதங்களுக்கு பிறகு, அவனின் மாமா ராமனின் அழைப்பிற்கினங்க மலேசியா வந்தான். அந்த இடம் மாற்றம் அவனுக்கு புத்துணர்சியளித்தது. அப்பாவின் லண்டன் கம்பனியை அவரின் மேனஜர் கண்கானிப்பில் விட்டு விட்டு, சில நாட்கள் ஓய்வுக்காக தன் மாமாவின் வீட்டிலிருந்து தங்கியபடியே ஒன்லைனில் தன் பிசினஸ் மீட்டிங்கையும், மாமாவின் பிசினஸுக்கும் உதவியாக இருந்தான்.
.................தொடரும்